திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.39 திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை |
கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.
|
1 |
சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.
|
2 |
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.
|
3 |
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே.
|
4 |
குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
கறைநி லாவிய கண்டனெண் டோளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன்நீள்கழ லேத்தி யிருக்கிலே.
|
5 |
நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.
|
6 |
நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோபுவி வாழ்க்கையே.
|
7 |
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமுந்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.
|
8 |
பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே.
|
9 |
நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.
|
10 |
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |